Wednesday, 25 November 2015

தகவல்

இங்கே சேர்த்த கவிதைகளை மீண்டும் சேர்த்துள்ளேன் போலிருக்கிறது.. சரிபார்த்து நீக்கப்படும்
கிரிகாசன்

சக்தி கொடு 2





விண்ணெழுந்த புள்ளினங்கள்
. வானில் நின்று தேடும்
வீறெழுந்து மேனிசுட்ட 
. வெய்யில் மீண்டும் தோன்றும்
மண்பிறந்த மென்மலர்கள்
. மஞ்சள்செம்மை வண்ணம்
மாற்றமென் றிதழ் பிரிந்தும்
. மாலை யொன்றில் கூடும்
தண்ணலைகள் நிம்மதியைத்
. தேடியோடி மாளும்
தாங்கிடும் நீர் தாமரைக்குத்
. தந்தனத்தோம் போடும்
எண்ணவே இனிக்கு மாங்
. குயில் படித்தகீதம்
இத்தனை எழில்படைத்தாள்
. அன்னை சக்திதானும்
வெண்ணொளிக் கதிர்சிறந்து
. வானமேறக் காணும்
வீழ்ந்த சின்னத் தூறலை
. விரும்பித் தோகை ஆடும்
விண்வளை விதானத்தோடு
. வில்லின் ஏழுவண்ணம்
விந்தை காண் உன்வாழ்வு மெந்தன்
. விம்பம்கொண்டதென்கும்
பெண் குழைந்து பேச நெஞ்சம்
. பூவில் வண்டென் றாகும்.
பேதை உள்ளம் போதைக் கள்ளை
. பார்வைமொண்டு வார்க்கும்
அண்மைகண்டு திண்மைகெட்டு
. ஆணின் நெஞ்சம்வேர்க்கும்
அச்சம் விட்டு பெண்மை கிட்ட
. ஆனந்த வாழ்வேங்கும்
கண்ணில்காணும் காட்சிகொண்ட
. காலம்செய்யும் மாயம்
காதலின் இயற்கையின்பக்
. காட்சியை யும் மாற்றும்
எண்ணம்மீது வேட்கைபற்றி
. இச்சை கொண்டு பாயும்
இல்லை யென்றபோது துன்பம்
. ஏணி வைத்தேஏறும்
தண்ணலைத் தடாகத் தூடு
. தாக்கும் கற்கள் வீழும்
தன்னைமீறி நீரெழுந்து
. தன்மை கெட்டேமூடும்
புண்ணெழுந்த தாக நெஞ்சம்
. புன்மை கொண்டுவாடும்
புத்துணர்வுகொள்ளச் சக்தி
. அன்னைவேண்டு நாளும்
***********************

வாராய் பெண்ணே!



காலத்தின் கோட்டையில் கட்டியதாய் ஒரு 
காணெழில் கோபுரம் நீயோ - அந்த
.நீலத்திரை வண்ண மேடையிலே வானில் 
நிற்கும் எழில் மதியாமோ
கோலத்தில் வெண்பளிங்கொன்றில் செதுக்கிய
கூருளி செய் சிலை தானோ அந்த
நாலதிலே கொண்ட நாணமோ கொள் முகம்
நன்கு சிவந்திடப் போமோ.

வேலதையே விழி கொண்டெறிய அதில்
வேதனை கொள்பவன் நானோ - நடுப்
பாலத்திலே வழிபக்கம் தெரியாது 
பார்த்து கலங்கிடுவேனோ
மூலத்திலே பகை கொண்டதல்ல எனை
முற்றும் வெறுப்பவள் நீயோ - அதி
தூலமெனும் நினைவானதிலே கூடித்
தோளில் மாலையி டுவாயோ 

சாரத்திலே  உள்ளே அன்புவைத்தேன் அதைத்
தட்டிப் பறிப்பவர் யாரோ - ஒரு
ஓரத்திலே விதி  என்னை  விட்டு உந்தன் 
எண்ணத்தில் வேறிடுமாமோ
ஆரத்திலே கோர்த்தே ஆடும் மணிகளை 
அன்ன அணைந்திட லாமோ - இந்த
நேரத்திலே  என்னை நீமறந்தே  எந்தன்
நெஞ்சை விட்டே  அகல்வாயோ

வீரத்திலே  இவன் வேல் முருகின் வரம் 
வேண்டி அடைந்தவன் பாராய் -அடி
வேரதிலே மரம் விண்ணுயரும் அதன்
விந்தைநிலை யாவேன் கேளாய்
ஊரதிலே உன்னை வாழ்த்திடவே வைப்பேன்
உண்மை நம்பி கரம் தாராய் - இந்தப்
பாரதிலே மலர்ந்தாடும் இளம்பனிப்
பூவின் மென்னுள்ளமே சேராய்

காலம் வராதோ?

பொட்டுவைத்தாள் தீஎழவும்  
.  புன்னகைத்தே சுட்டுவிடப்
பட்டெரியும் வீறுடனோர் 
.   பாங்கு மமைத்தாள்
ஒட்டவைத்தாள் ஓருயிரை 
.  உள்மனதில் அன்பை இட்டாள்
கட்டி வைத்தால் காலிரண்டை
.  காதல் என்றிட்டாள் 
.  
தொட்டுவிட்டால் தோலுணர்வில் 
.   சொர்க்கம் என்றே இன்பமிட்டாள்
தோளில் ஒரு மாலை யானை 
.   போடவும் வைத்தாள்
கட்டில் அர சேறவைத்தாள் 
.  கற்பனையில்  மோகமிட்டே 
காற்றுடனே பார்த்திருக்கக் 
.  கரைந்திடச் செய்தாள்

மொட்டு இதழை கட்டவிழ்த்தாள் 
.  முன்மதுவை இட்டுவைத்தாள்
மெட்டிசைக்கும் வண்டினத்தை 
. தொட்டுண்ண விட்டாள்
திட்டமிட்டாள் தேடி வந்தே 
.  தேவைஎனும் போதினிலே
தட்டுமிட்டாள் தட்டில்பணி 
.  தக்கது மிட்டாள்

மட்டுமட்டாய் வாழ்வினிலே 
.  மாறி அந்தம் ஆகையிலே
கொட்டிவைத்தாள் சக்தி எனும்
.  கொள்கையைக் கூட்டி
விட்டமதைக் கூடச் செய்தாள்  
.  விரிவானின் எல்லையின்றி
வட்டமென வான் வளையும் 
.  அற்புதம் செய்தாள்

கெட்டுவிடச் செய்வதென்ன 
  கீழ்குடிகள் காவல்கொள்வோம்
கட்டவிழ்த்துக் கண்துலங்கச் 
,    காணவை என்றால்
முட்டவிழி மலர வைத்தாள் 
..   முன்னிருந்து ஆக்குவித்தாள்
மூவுலகும் தோற்றமெழக் 
    முன்னி றுத்தினாள்

வட்டமெனச் சுற்றுமந்த 
.   வான்வெளியின்கோளங்களை
விட்ட வழிசென்றெழிலைக் 
  .  விழி கொள்ளுவேனோ
அட்ட திக்கும் சென்றவளின் 
.     ஆற்றலுடன் நானிணைந்து
ஆன இருள் தான் விரட்டும் 
.    காலம் வராதோ

வேண்டுதல்

தன்தாளே நான்வணங்கத் தந்தவளே கூறண்டம்
சென்றாழம் காண்பேனோ சுற்றும் பூவியுருண்டு
நின்தாளம் கொண்டசைய நீலக்கரு வானத்
தின்பால்கொள் சூரியன்கள் போல்நானும் ஒளிரேனோ
சிந்தை களித்திடச் செய்கவிகள் தேன்போலும்
சந்தம் கிளர்ந்தெழவும் சாற்றுவையோ நான்கேட்டு
உந்தன் குரல்மொழியாய் உருவாக்கி இங்களிக்க
செந்தமிழ்க் கவிகேட்போர் சிந்தை யுனில் திரும்பாதோ
வந்தால் ஒளி பெருகும் வையகத்தில் இருளகலும்
எந்தாழம் ஆனாலும் இதயத்துள் ஓளிசிறக்கும்
வெந்தால் எரியுமுடல் விட்டோடும் மனவிளக்கு
பந்தால் சுவரெறிந்த பாடு உன்னில் திரும்பிடுமோ
கந்தை உடைபூண்டு கடும்பிணியில் உழன்றவனை
அந்தோ அருணகிரி ஆக்கி விட மாட்டாயோ
விந்தை நோய் எனைவிட்டு வெளியேறக் காண்கிறேன்
சிந்தால்கவி படிக்கச் சொல்லெடுத்துத் தாராயோ

விதியின் விளையாட்டு



விதிநீயே விளையாடும்போது 
 வேண்டுவதென் நாம் மனிதம்தானா 
எதிலேயும் துன்பங்கள்தானா 
  இல்லை யுனக்கிரக்க குணம் ஏனோ
குதித்தாடி நீசெய்யும் மாயம் 
  குருடாக்கி எமை வீழ்த்தலென்ன
சதிசெய்யும் கலைபடித்த வல்லோன்  
  சகுனிக்கோ பாடம் சொன்ன ஆசான்

நதிஓடும் நடந்தாலும் சேரும் 
  நான்கு திசை கண்டும் கடல் கூடும்
புதிதாகப் பூத்த மலர் வண்டு 
  போதை கொளும் தேனை உண்ட பின்பு
பதியோடு சதிசேரும் வாழ்வும் 
  பனிபூத்த புல் வெளியின் காற்றும்
இதிலேயும் அதிலேயும் எங்கும் 
  இட்ட  மகிழ் வேன் எமக்குத் துன்பம்

விதியென்று கட்டளை யிட்டாரோ 
   விந்தையுன்னில் எண்ண்மிட்டதாரோ
மதிதன்னை மயக்குவதில் மன்னன் 
   மாயவித்தை மகுடிஊதும் குள்ளன்
பொதியாக நாம்சுமக்கும் கூடு 
   போட்டுடைக்க செய்யும்வழிபார்த்து
அதிலேயும் ஆணவத்தைக் கொண்டு 
   அள்ளுமுடல்  செய்வலிகள் தந்தே

கொதிக்கின்ற உள்ளமதை கொண்டோம் 
  கூடிச் செய்யும் வஞ்சனைக்குள் நில்லோம்
அதிகமென்று கொண்டதென்ன துன்பம் 
  அல்லலுற்று வேதனை கொள் இல்லம்
முதிர்வயலில் முற்றும் கதிர்வளையும் 
  முத்தமிழைப் பேசுமினம் நிமிரும்
சதி செய்துவாழ்வளிக்க முன்னே 
  சற்றுப் பொறு சதிமதியால் வெல்வோம்

செய்தவள் அவளே!

திக்கெட்டும் சேதிகள் தேடிதிரி இன்னும் 
தேரெனச் செய்தவள் அன்னை
சிக்கட்டும் உள்மனம் தீயினிலே எனச்
சேர்த்திடவோ வெறும் பொன்னை 
தக்கதக என்றே மின்னிடச் செய்யவும்
தந்தவளோ தீயில் என்னை
தக்கத் தக தக தக்கன காணவோ 
தந்ததுமென் என்னுள் என்னை?

இக்கதியே னதை  இன்னும் புரிந்திலேன்
இக்கணம் மட்டிலும் இல்லை
பக்கத்திலே அவள்பட்டு ஓளிர்ந்திடப்
பார்த்தவன் என்செய்ய கண்ணை
முக்கனம் கேட்டவன் மூக்கில் விரலிட
முன்னேவிட்டால் இனி யென்னை
எக்குறைவுமற்று காத்திடுவாள் என்றே
எண்ணினேன் தாஅருள்தன்னை

அற்புதமே அன்னை யாக்கைஅளித்தவள்
ஆக்கலழித்திட முன்னை
பற்றுதலால் எனைப் பற்றிநின்றாள் வெகு
பக்குவமாக வேதனை
சுற்றிநின்ற துயர் போகிடச்செய்துமே
சுத்தமென் றாக்கிட என்னை 
இற்றைய நாள் ஒளி யீந்தனளோ இனி
என்வழி செல்லடிசொல்லாய்

நித்தியமே சக்தி நிச்சயமே ஒளி
நீளவிண்ணின் ஆதிமுன்னை
சத்திய காரூண்ணிய சித்தி விளைப்பவள்
செய்யென சொல்வதும் உண்மை
புத்தியிலே கடும் போதனை செய்வளோ
பார்த்திருந்தேன் இனி என்னை
எத்திசையில் வழிகாட்டுவளோ அதை
எண்ணிக் கிடக்கிறேன் அன்னை!

******************************