Monday 11 January 2016

கண்டால் சொல்வீரோ ?


தேடுகிறேன் காணவில்லை தேன்மலரே நீயெங்கும்
வாடும் தமிழனுக்கோர் வழிஒன்று கண்டதுண்டோ
கேடும் துயரங்களும் கெட்டுமனம் சோர உயிர்
ஆடுமொரு ஊஞ்சலென ஆவியலைந் தோடுகிறான்
வெள்ளைநிற மல்லிகையே விதிதானும் இவ்வழியே
அள்ளிப்பெ ரும்புயலாய் அடித்தோடக் கண்டனையோ
நள்ளிரவில் கொல்லுவதும் நாடுபெருந் தீயெரியக்
கொள்ளிவைத்துக் கொல்விதியை கூப்பிட்டு சொல்லிவிடு
கூவி இசைத் தேன்படிக்கும் கோகிலமே இவ்வழியில்
காவியுயிர் தோள்சுமந்து காலன்வரக் கண்டனையோ
ஆவி,உடல் தான்பிரித்தே அள்ளுமுயிர் கொஞ்சமில்லை
சாவு இனிப்போதுமென்று சற்றே நிறுத்தச் சொலு
கார்இருளின் நேர்முகிலே கனத்தோர் மழைபொழிய
நீர்அருவி ஆறெனவே நீபோகும் மண்ணதிலோ
ஊரை அழித்தவனால் உதிரமது பெருகி நதி
ஆறாகி ஓடவைத்தோன் அழிய இடிவீழ்த்தாயோ
வட்டச்சு னைநடுவில் வந்த’அலை’ காலுதைக்க
பட்டதுயர் தான்மறந்து பங்கயமே ஆடுகிறாய்
தொட்டபகை காலுதைக்கத் தூயதமிழ்த் தம்பிசிலர்
விட்டமொழிக் காடுவது விந்தைஉனைக் கற்றதிலோ
ஊரின்எழில் பார்த்துலவும் ஓடுங்கார் வான்முகிலே
நீரைப்பொழிய முன்னே நின்றுபதில் சொல்லிடுவாய்
ஊரை உறவுகளை உத்தமரைக் காக்கவெனப்
போரைநடத் தியவர் போனவழி கண்டதுண்டோ
காற்றின் சுதந்திரமும் காணுமதன் விடுதலையும்
பேற்றில் பெரும்பேறாய் பேசிடுவர் எனையெண்ணி
நேற்றோ பூந்தென்றலென நின்றவர்கள் நீதிக்காய்
சீற்றப்புய லாகிப்பின் சென்றதிசை கண்டவர் யார்?
பூவே, விரிவானே, போகும்முகில், புள்ளினமே
நாவே நறுந்தமிழை நல்லிசைப்போர் கொன்றுஒரு
சாவே பிடியென்று சுற்றும்புவி தந்திடினும்
போ,வீறு கொண்டிவரோ புத்தீழம் செய்திடுவர்!

No comments:

Post a Comment