Monday 11 January 2016

என் அன்னை, என்தேசம், என்கனவு

பகுதி 1
என்னோர் எழில்! நிலவோ ஏறிவான் வீதியிலே
மின்னும் தனதொளியை மேதினியி லூற்றுங்கால்
தன்னந் தனிநடந்து தங்கநில வொளிகுளித்து
முன்னே என்பாதையில் மேற்குவழி நடந்தேன்
வெண்மை நிலவொளியின் வீச்சினில் முன்னிருந்த
கண்முன் னெழில்தோற்றம் கைவரைந்த ஓவியமாய்
எண்ணக் கனவுகளில் எழுகின்ற மாயமெனும்
வண்ணம் கலந்திருக்க வழியில் அவள்கண்டேன்
மண்ணோடு தூசுபட மைவிழிகள் கோபமுற
விண்ணோ டெறித்தநிலா வீசுமொளி மின்னலிலே
பெண்ணின் திடமிழந்து பேசற்கரியவளாய்
திண்மை யிழந்து,வரும் தென்றல் உடல்சரிக்க
நின்றாள் துயர்பெருத்த நீள்விழிகள் நீர்சொரிய
தென்றல் தொடுந்தேகம் தீயெனவே வேகிவிட
கன்னம் எழில்சிதையக் கண்ணீரும் காய்ந்திருக்க
என்னோர் துயரடைந்தாள் ஏதறியேன் என்றதனால்
பெண்ணே பெருந்தகையே பெயரேது நானறியேன்
கண்ணீர் வழிவதுமென் காரணமும் தானறியேன்
மண்ணில்பெருவாழ்வு மாதுகொண்ட தாய்வதன
வண்ணம் தெரியுதம்மா வந்ததிங்கு ஏதென்றேன்
நெஞ்சம் அழுதுகொள நிர்க்கதியாய் ஏந்திழையோ
கொஞ்சம் எனதுகுரல் கொடுத்த மனத்துணிவில்
வஞ்சம் இழைத்தாரே வாழ்விலோர் சிங்கமகன்
நஞ்சின் நெஞ்சத்திரு நாட்டின் கொடியவனாம்
எந்தன் பெயரீழம் இன்பமுடன் தேன்தமிழைச்
சொந்தம் கொண்டே நிலத்தை சுற்றிவர மைந்தரவர்
வந்தோர் பகையறுத்து வாழ்வுதர வீரமுடன்
செந்தேன் தமிழ்வளர்த்து சீருடனே ஆண்டிருந்தேன்
பூவிரியப் புள்ளினங்கள் பொன்வானில் நீந்திவர
தாவிவிழுந் தோடும்நதி தமிழ்வாழ்த்தி இசைபாட
வாவிதனில் நீரோடி வட்டஅலைப் பூமலர
பூமிதனில் ஈழமெனும் பொன்நாட்டுக் கன்னையிவள்
என்னோர் அழகுடனே ஏற்றமுடன் நானிருக்க
வன்மை கொண்டேயுலகு வாழ்வை அழித்ததையோ
இன்னும் உயிர்களைந்து இதுபோதா ஊரழித்து
பொன்போலும் பூமிதனை பேய்வாழச் செய்தார்கள்
கொஞ்சங் குரல்நடுங்க கோதையுடல் தான்துடித்து
பஞ்சாம் முகில்நடுவே பாயுமிடி மின்னல்பட
நஞ்சின் கொடுமைகொண்ட நாகமொன்று தீண்டியதாய்
நெஞ்சம் துடிதுடித்து நினைவழிய மேலுரைத்தாள்

No comments:

Post a Comment