Sunday 14 June 2015

உலகமே பொய்யா நாங்கள் கற்பனையா

வெள்ளையென்றார்  அது வெள்ளையில்லை - அது
வேடிக்கை கண்செய்யு மாயம் - பொருள்  
உள்ளதென்றார் அங்கே ஒன்றுமில்லை - அது
உள்நிகழ் கற்பனைத்தோற்றம் - அது
துள்ளுதென்றார் கயல் துள்ளுச்சுனை அங்கு
தோன்றுதல் கானல்நீர்போலும் - இவர்
நள்ளிரவில் விழி கொள்ளவரின் -’இவை 
நம்முன் இல்லையென் றாகும்

வெய்யவனில் ஒளி பட்டதனால் -இந்த
விந்தை கொள் கண்வழிக் காட்சி -அதில்
செய்வதென்ன சிறுமென்படலம் தன்னில் 
சேர்ந்திடும் விம்பங்கள் ஆடும் - அதை
மெய்யயெனவே உளம் எண்ணுவதோ இந்த
மேதினியின் காட்சியாவும் -இது
பொய்யதுவோ இல்லை உள்ளதுவோயிது
பார்ப்பவரின் கனவாகும்

பூக்களெனில் அதை பூவென்பதென் எனைப்
பெற்றவள் சொல்லியதாகும் - அதை 
நீக்கமற நெஞ்சில் எற்றபடி மீள
நாமும் சொல்லும்விதமாகும் - சற்று
ஊக்கமுடன் கொஞ்சம் சிந்திப்பதால் அந்தப்
பூக்களின் பொய்மையை காண்போம் - அது
பூப்பதுண்டா வாடி வீழ்கிறதா இது
பொய்யின் அழைப்பெனக் காண்போம்

இது பூமியென்றார் நானும் பூமியென்பேன் இது 
எங்கிருந்து வந்தென்றேன் - அது
ஆதியிலே  உண்டு ஆனதென்றார் நானோ
ஆமெனக் கற்பனைசெய்தேன் - ஒரு
சேதியிலும் பார்வை எண்ணங்களும் கூடிச்
சேர்த்த தரவுகள் கொண்டே - நாமும்
ஏதிதிலெ மன விம்பங்களில் உண்மை 
உண்டென  எண்ணியும் வாழ்வோம்

சொன்னதை நானுமே சொல்லுகிறேன் ஏதும்’
சொந்தமெனக் கண்டதில்லை - மன
எண்ணத்திலே  மாயத் தோற்றங்களை நம்பி
எங்கள் மனதுக்குள் ஏற்றி - அதை
பன்மொழியில் பல நாமத்துடன் இந்த
பாரினில் கண்டதாய் கொண்டு - அதில்
என்னவெல்லாம் எங்கள் சிந்தை மயங்கிட
எண்ணக் கலவை கொள்வாழ்வு

தொட்டுணர்வும் வெறும்சிந்தனையே எங்கள்
தோலில் உணர்வதும் எண்ணம் - இளம்
கட்டிலறைக்  கதை காதலெல்லாம் இவர்
காணும் எண்ண அலைச் சொந்தம் - இவை
மட்டுமல்ல ருசி மோப்ப மெல்லாம் எங்கள்
சிந்தையெனும் உள்ள உணர்வு - அதை
கட்டிவைத்து கனவாக்கிவிட்டு கதை
கற்பனை ஆக்கிடும் மாயை

அன்னையிடம் அதைச் சொன்னவர் யார் அவள்
அன்னையி னன்னை யென்றாலும் - அந்த
அன்னை வழிவந்த அத்தனையும் உண்மை
யாமோ அறிவது இல்லை - இதில்
என்னவிதி இதன் உண்மையென்ன ஒரு 
அண்டவெளி செய்வர்யாரோ - பெரும்
ஆதியெனும் ஒருசக்தியதன் தோற்றம்
அத்தனையும் பெற்றோமாமோ

உள்ளமதில் நல்லகற்பனையை இங்கு
ஊன்றி வளர்த்தவர் யாரோ - அதில்
கள்ளமின்றி ஒருகாலம் வைத்து இந்த
ஞாலமும் செய்தவராமோ - இதில்
வெள்ளையென நிறம் நீலவிண்ணும் அதில்
வேடிக்கை மின்னிட விண்மீன் - அதை
அள்ளிக்கொட்டி அதியற்புதமாய் தங்க 
ஆடையென வண்ணம் இட்டாள்

தோளுரமும் இந்தத் தேகஎழில் உயர்
தோன்றிடும் பருவம் யாவும் - இங்கே
தேய்ந்துவிட  ஆடும் ஊஞ்சலினை எண்ணி
தேவைவரை யாடும் போது -இடை
மாய்ந்துவிடா சில மந்திரங்கள் தந்து
மாயமெனும் சக்தியூட்டி - பல
தாய்க் கவிதை எனைப்பாடு என்றாள் இந்த
பாடல் எனதுயிரோட்டம்

உள்ளுடலில் தினம் சுற்றிவரும் எங்கள்
உதிரம் கொண்டது சூடு . அது
அள்ளிகணம் வீசுந் தென்றலது எங்கள்
ஆவி அலைந்தோடும் காற்று - இதில்
உள்ள உடல்கொண்ட செய்கனிமம்  நிலம்
ஊற்றும் மழையதும் சேர்த்து -  தன்
வெள்ள அனலுடன் விண்ணின் பொறிகொண்டு
வேண்டும் இயக்கமும் தந்தாள்.

உள்ளசையும் சக்தி இல்லையெனில் வெறும் 
ஓடென ஆகிடும்தேகம் - அதில்
அள்ளியிட்ட அன்னம் எத்தனையோ  அது 
அத்தனையும் வளர் தேகம் - இனி 
துள்ளு நடஎன்று செய்தியக்கம் கொள்ள ’
தந்தவள் இன்னிசைநாதம் - எனக்
கள்ளையொத்த நாதசந்தமிட்டு கவி 
செய்யென சக்தியும்  ஈந்தாள்

செய்யும்வரை கவி செய்திடுவேன் இது
செந்தமிழின் பணியாகும் - இனிப்
பெய்யு மழை பெரு வெள்ளமென இந்தப்
பேசும் தமிழ்க்கவி காணும் - ஒரு
எய்யும்கணை அதன்செல்லுமிடம் போலும்
எந்தன் கவி உள்ளம் தோன்றும் -இதைத்
தெய்வம்தந்தாள் அதில் தேவை வைத்தாள் இந்த 
தேன்கவியென் னுயிரோட்டம்
(முடிந்தது)

No comments:

Post a Comment