Wednesday 25 November 2015

வாராய் பெண்ணே!



காலத்தின் கோட்டையில் கட்டியதாய் ஒரு 
காணெழில் கோபுரம் நீயோ - அந்த
.நீலத்திரை வண்ண மேடையிலே வானில் 
நிற்கும் எழில் மதியாமோ
கோலத்தில் வெண்பளிங்கொன்றில் செதுக்கிய
கூருளி செய் சிலை தானோ அந்த
நாலதிலே கொண்ட நாணமோ கொள் முகம்
நன்கு சிவந்திடப் போமோ.

வேலதையே விழி கொண்டெறிய அதில்
வேதனை கொள்பவன் நானோ - நடுப்
பாலத்திலே வழிபக்கம் தெரியாது 
பார்த்து கலங்கிடுவேனோ
மூலத்திலே பகை கொண்டதல்ல எனை
முற்றும் வெறுப்பவள் நீயோ - அதி
தூலமெனும் நினைவானதிலே கூடித்
தோளில் மாலையி டுவாயோ 

சாரத்திலே  உள்ளே அன்புவைத்தேன் அதைத்
தட்டிப் பறிப்பவர் யாரோ - ஒரு
ஓரத்திலே விதி  என்னை  விட்டு உந்தன் 
எண்ணத்தில் வேறிடுமாமோ
ஆரத்திலே கோர்த்தே ஆடும் மணிகளை 
அன்ன அணைந்திட லாமோ - இந்த
நேரத்திலே  என்னை நீமறந்தே  எந்தன்
நெஞ்சை விட்டே  அகல்வாயோ

வீரத்திலே  இவன் வேல் முருகின் வரம் 
வேண்டி அடைந்தவன் பாராய் -அடி
வேரதிலே மரம் விண்ணுயரும் அதன்
விந்தைநிலை யாவேன் கேளாய்
ஊரதிலே உன்னை வாழ்த்திடவே வைப்பேன்
உண்மை நம்பி கரம் தாராய் - இந்தப்
பாரதிலே மலர்ந்தாடும் இளம்பனிப்
பூவின் மென்னுள்ளமே சேராய்

No comments:

Post a Comment