Sunday 5 July 2015

ஓவியப் போட்டி (கவிதை) தொடர் 2

விடை தெரியுமா? 2
********************
ஓவியர்கள் உவகையுற்றுத் தூரிகை கொண்டு 
உள்ளத்தில் தோன்றுமோர் காட்சிப் பொருளை
காவியத்தில் காணுமின்ப வெள்ளம் போலும்
கற்பனை எனும் சுகத்தைக் கலந்தே செய்தார்
தூவி மலர்ப் பஞ்சணையில் தூக்கம் கொண்டே
தொலை மறைந்த ஆதவனும் தோன்றும்காலை
போவிரைந்து காணென்று உள்ளம் கூறப்
புன்னகைத்து மன்னன் கலைமாடம் சென்றான்

சென்றாங்கே முடித்து வைத்த ஓவியங்களைச்
செய்தஎழிற் பொன்னிகர்த்த சித்திரக்காட்சி
தேன்சுரந்த பூஎன்றும் திங்கள் போலும்
தித்திக்கும் அமுதத்தை ஒத்தாற் கொள்ள
என்னென்ன வடிவங்கள் எதனைச் செய்தார்
எவரதற்குள் ஏற்றவிதம் வண்ணம் கொண்டார்
மேன்மைதனை அறிவேனென் றுள்ளம்கொண்டே
மேவிநடை துரிதமுற்றே முன்னாற் சென்றான்

பொன்னெடுத்துப் பெண்ரசித்து மண்ணை ஆளும்
பெருமிதத்தில் தனைநிறுத்திப் பேசும்மன்னன்
முன்னிருந்த ஓவியத்தின் வண்ணம் கண்டான்
மேனிசிலிர்த்தான் எழில்சார் மலர்கள் கொத்தாய்
பன்னிறத்தில் பூத்த எழிற் பூங்காவனம்
பனிபடர்ந்த இதழ்பொலிந்த பருவக் காட்சி
முன்னிருந்த பூக்கள் வெறும் ஓவியமல்ல
முற்று முயிர் கொண்டதுவோ மங்கை கொண்ட

கண்கள் இமை துடிப்பதெனக் காற்றின் ஆடும்,
கரம் தொட்டால் நாணமுறும் கனிவாம் மென்மை
உண்ணமலர் இதழ் கொண்ட கள்ளோ மின்ன
இடையழகில் உன்மத்தம் ஆக்கும் வண்ணம்
வெண்மை யதோ வைரமென்ப் பவளம் முத்தும்
விளங்குமெழில் மாணிக்கம் போலும் வண்ணம்
எண்ணமதை மயக்கிவிட எழுதித் தந்தான்
இவன்படைப்பில் இறைவனையும் மிஞ்சிக்கொண்டான்

என்றெண்ணும் மன்னன் ஆங்கின்னும் கண்டான்
இழைந்த அவ் வண்ணத்தின் இயற்கைக்கோலம்
தன்னில் அவை மலர்ந்திட்ட உண்மை பூக்கள்
தானிடையில் தேன் காணும் என்றே வண்டும்
கன்னங்கரு தன்னுடலைக் களிப்பில் ஆக்க
கலகலத்து ரீங்கார ஓசைகொண்டே
முன்பறந்து மோதியந்த வண்ணத்திரையின்
மூர்க்கமுடன் வீழ்ந்தாலும் மீண்டும் மீண்டும்

எண்ணி யந்த உண்மைதனை ஏற்காநெஞ்சாய்
இன்னுமின்னும் மோதும்நிலை கண்டான் அடடா
திண்ணமிது வண்டினையும் நம்பச்செய்யும்
தீட்டிய இவ்வோவியமே தேர்வில் வெல்லும்
எண்ணமதில் ஈதெடுத்து இரண்டாமவனின்
எழுதும் கைஆக்கியது எதுவோ காண
விண்ணிருக்கும் தேவர்களும்வியக்கும் அழகை
வைத்திருப்பதோ என்றே காணச்சென்றான்

{இரண்டில் முடியவில்லை இன்னுமுண்டு)

No comments:

Post a Comment