Sunday 5 July 2015

அரண்மனையில் ஒருகாட்சி



(முன்னிருட்டு நேரம் அரண்மனையில் நிசப்தம் ஆச்சரியப் படுகிறாள் தோழி)

நந்தவன மாகாதோ?
தோழி:
அன்பிலே விதை விதைத்து ஆசையெனும் நீரூற்றி
பொன்னாய்ப் பயிர்வளரும் பூத்து மலர் பொலியுமெனத்
தென்போடு காத்திருக்கத் தேய் பிறையின் பொலிவெடுத்து
தன்னில் உளம்வாடித் தவிப்பதுமேன் சொல்தலைவி

தலைவி
கண்முன் கணம் தோன்றிக் காற்றிலெழும் வித்தைசெய்து
பெண்ணின் மனமுருகப் பேசியெனைப் பித்தாக்கி
எண்ணம் மயக்கி உரு எத்தனை தானெடுத்தாலும்
திண்ணமின் றெனை மறந்தால் தேகம் பதை பதைக்காதோ

செந்நெல் விதையெறிந்து சீராக மண்குழைத்து
வெந்து வியர்வைகொட்டி வெய்யில் நின்றுடல்கறுத்து
வந்து மழை வானூற்றும் வயல் செழிக்குமென்றிருக்க
அந்தோ வான்பொய்த்துவிடின் அகமெடுத்த வகையானேன்

தோழி:
நொந்து படும் வேதனையும் நிகழ்வுச் சிறுமைதனும்
மந்தவெயில் முன்னெழுந்த மறைமுகிலாய் பறந்துவிடும்
செந்தமிழும் கேட்குமதில் சிந்தையொலி சந்தமெழும்
வந்தவனும் தந்திடுவான் வானுறையும் தெய்வ முண்டு

தந்தனதா ஓசையெழத் தமிழினித்த மங்கையவர்
வந்துநடம் செய்யுமொலி வானமெழும் பொற்கவிதை
சந்தமெழச் சத்தமிடும் சிந்தை குளிர்ந் தின் வசந்த
நந்தவன மென்றொளிர நாளும் இறை பூச்சொரிவாள்

No comments:

Post a Comment