Sunday 5 July 2015

கானலா காட்சியா



காலத்தின் காணிளம் தேவதையே இக்
. காட்சிகள் மாயங்களா
கோலத்தில்நீ குழைத் தீட்டிய வண்ணத்தைக் 
. கொண்டதோ ரோவியமா
ஞாலத்தில் இங்கே நடப்பதெல்லாம் வெறும் 
. ஞாபக விம்பங்களா
மேலதில் விண்ணில் மிகைப் படவே ஒளி
. மின்னலும் கற்பனையா

நாளும்விடிவது நாடகத்தின் அங்கம்
. நாட்டிய மாற்றங்களா
ஆளும் அலங்காரப் பாத்திரமா பூமி
யானதென் மேடையிதா
ஏழும் இசைகண்டே ஆடுமரவமென்
. றாக்கிய தெம்முணர்வா
மாளும் உடல்தந்தும் மானிடமென்றபின்
. மங்கிடும் தீபங்களா

ஆடிமுடித்தே யரங்கம் வெளித்திட
. ஆவிசென் றுள்ளதெங்கே
ஒடிக் களைத்து முட்கார்ந்திரு க்கும்போதே
. ஓசை பிரிப்பதென்னே
பாடிக் கைகொட்டியும் பந்தங்களோடாடிப்
. பாரினில் கண்டதென்ன
மூடித் திரைபோட்டு முன்னாலிருத்திப் பின்
. மூச்சைப் பறிப்பதென்ன

சூடும் பூம்பாவையின் சூட்சுமமென் எழில்
. சொட்டுங் கவர்ச்சியுமென்
கூடுமுறவுகள் கொண்டஇரவுகள்
. கொட்டும் மெய் தாளங்களேன்
தேடும் திரவியம் தேவைகள்யாவும் இத்
. திக்கெட்டும் கொள்வதுமேன்
நாடும் மனம் வைத்தென் நாள்வர ஞாபகம்
. நம்மைப் பிரிவதுமேன்

வானத் தொலைவிலே பச்சை நீலசெம்மை
. வண்ணங்கள் செய்தவர் யார்
போனதில்லை அந்தப் பிரபஞ்சத்தூடே ஓர்
. புத்தொளியும் உண்டோசொல்
ஊனத்திலே பலஓட்டையிட்டு எமை
. உள்ளே இருத்திவைத்தும்
நானிலத்தில் கடைநாளென் றிருந்தபின்
. நாடும் வான் வண்ணமோ சொல்

கூடும் மாவிண்ணதிர் கோளங்களாடிடக்
. கூழெனும் தீக்குழம்பேன்
ஓடுமவ் வண்டங்கொள் பிரகாசங்கள் அங்கு
. உள்ளதோ கானலோ சொல்
வீடும் கிழக்கெனும் வீதியுமேன் அந்த
. வண்ணத்துத் தேருலவும்
தேடும் உயர்திரு தெய்வத்தலங்களுள்
. தெய்வமுண்டோ கேட்டுச்சொல்

No comments:

Post a Comment