Sunday 31 May 2015

நானும் பூவும்

தோட்டத்தில் நின்றது ரோஜாச்செடி - அதில் 
துள்ளி எழுந்ததோர் பூமலர்ந்து
நாட்டத்தில் மென்மையை நான்ரசிக்க - அது 
நாறிக் கவர்ந்ததோ வண்டிலொன்று
கூட்டத்தில் கொண்ட கு தூகலமோ - மது 
கொண்டு களித்தபின் வண்டெழுந்து
ஓட்டத்தில் சென்றது பூவிருந்து - வாடி
ஓரத்தில் வீழ்ந்தது நாளிலொன்று

நீட்டத்தில் நானும்பின் திண்ணையிலே - உடல்
நீளக் கிடந்தவன் எண்ணத்திலே
தேட்டத்தில் என்னவோ தேன்நிறைந்தும் - அதைத்
தின்னக்கொடுத்தது வீணனுக்கு
பாட்டில் கிடக்குது பாராயிப்போ - அது
பட்டு விழுந்திடல் பாவமன்றோ
வாட்டிக் கருக்கும் தன் வாழ்வறிந்தும் மலர்
வண்டை அழைத்துண்ண விட்டதென்ன

பூவும் சிரித்தது பார்த்தெனையே - அட
போடா மனிதா உன் புத்தியென்ன
நாவும் நல்லோசையும் கொண்டுமென்ன - உந்தன்
நாறும் உடல்தரும் நன்மையென்ன
ஏவும் செயல்கொண்ட தின்னாதவை - இன்னும்
ஏழைசெல்வம் எனும் இரண்டுவகை
யாவுமொரு தினம் வாழ்ந்திடினும் - எங்கள்
ஞானம் சிறித்தேனும் உன்னில் உண்டோ

ஏட்டில் எழுதிப் படிப்பதொன்று - பின்னர்
எட்டியிடிப்பது கோவில் கண்டு
நாட்டில் நடப்பது ஏதுநலம் - செய்கை
நாலுவிதம் கரும் புத்தி கொண்டு
போட்டி பொறாமையும் வஞ்சமென - நீவிர்
போடும்மனவேடம் புத்ததவம்
வேட்டையாடுவதும் உன்குலமே - அந்த
வேஙகை அரிவேழம் வீழ்வதல்ல

கேட்ட பொழுதினில் ஈய்வதில்லை - அன்பு
கேடு தரும் வாழ்வு இன்பமில்லை
மீட்ட நினைந்து கை வீணைகொண்டால் - அங்கு
மென்னிசை யன்று முழக்கங்களே
தீட்டினைக் கொண்டுமே காணுகிறீர் - நீவிர்
சேர்த்தது இச்சையும் மோகமும்காண்
சாட்டுங் கை குற்றமும் அன்னியரை - உமைச்
சார்ந்தவை பொய்யுடன் சூதுவகை

நாட்டினி லெத்தனை பூக்களுண்டு - வரும்
நல்ல மணம்பல வண்ணம் வேறு
கோட்டினின் எல்லையைத் தாண்டவில்லை -நாமும்
குற்றம் கொடுமைகள் செய்வதில்லை
ஆட்டிச் சுழலிடும் பூமியிலே - எங்கள்
ஆயுள் குறையினும் பூமலர்வில்
கூட்டிகொடுப்பது இன்பம்மொன்றே - எங்கள்
கொள்கை மேன்மை இதைக் கேள்மனிதா!

No comments:

Post a Comment