Sunday 31 May 2015

தமிழ் மகள் வந்தாள்

சொல்லென நின்றாள் சுவைமிகு சந்தச்
சோலையின் மலர்போன்றாள்
மெல்லின இடையில் மிகுவல் லினமோ
மேவிய தமிழாவாள்
வெல்லெனும் இளமை விடியலின் குளுமை
விரவிய மதுபோன்றாள்
கல்லெனும் பொருளைக் கலைஎனக் காட்டாய்
கையுளி கொள்ளென்றாள்

தொல்புகழ் தமிழாள் துணையென வந்தாள்
தெரிந்திடப் பல புகன்றாள்
நில்லெனக் கூறி நிமிரென ஆக்கி
நிழல்புதி தென ஈந்தாள்
பல்கலை அறியேன் பள்ளியிற் கடையேன்
பிரம்மனின் மறதி என்றேன்
கொல்லெனச் சிரித்தாள் குறுகுறுப் பார்வை
குலவிட விழிகண்டாள்

சில்லெனும் காற்று திரிந்திடக் கண்டு
தேரது நுழைஎன்றாள்
வில்லெனும் புருவ விழிகளைக் காட்டி
விரைந்திடு வெனப் பகன்றாள்
எல்லையுமற்ற இளமையென் தமிழாள்
ஏறிட வைத்தென்னைத்
துல்லிய வானில் திரிகிற மேகத்
திசையினில் போகவிட்டாள்

சல்லெனும் ஓசை சங்கீத ராகம்
சற்றெழும் வேளையிலே
செல்கின்ற பாதை பொன்னென ஒளிரும்
சிறப்பைக் கண்வியந்தேன்
புல்லதன் பச்சை பொலிகடல் நீலம்
புலர்வான் செந்நிறமும்
பல்வகை வண்ணம் பனிநீர் குழைத்தே
பார்வையால் தீட்டிவைத்தாள்

இல்லமும் வரைந்து இளவெயில் மரங்கள்
இடையினில் நீரோடை
நல்லிளம் பூக்கள் நாறிடக் கிளர்வும்
நகையென முகைஅவிழ
சொல்லினைத் தேராய் சுந்தரத் தமிழைச்
சுவைபடக் கோர்என்றாள்
மெல்லிய உருவம் மிகஅதிவிடியல்
மிளிர் ந்திடும் சுடர்போன்றாள்

கல்லினைக் கண்டேன் காரிகை உருவம்
கல்லினுள் காண்கின்றேன்
மெல்லென விடியும் வேளையிலெங்கும்
மேவிடும் கலை கண்டேன்
சில்லெனும் தென்றல் தழுவிடக் கையில்
சிறு கூர் கோலெடுத்தே
நெல்மணிக் கதிராய் நிறைவெழக் கீறு
நினைவெடு கவிதை யென்றாள்

முல்லையும் வண்டும் முன்னெழு பனியும்
முழு நிலவின் ஒளியும்
தொல்லையில் சூழல் சுதந்திர உணர்வு
தோன்றிட வழிசெய்தே
நல்லவை கூட்டிநனி தேன் தமிழில்
நடையெடு சொல்லென்றாள்
வெல்லமென்றாக்க விழை எனக்கூறி
விடியலில் ஒளி யானாள்

=================

No comments:

Post a Comment